Showing posts with label தேனீக்கள்.... Show all posts
Showing posts with label தேனீக்கள்.... Show all posts

Friday, April 2, 2010

தேன்.. தேன்...

 தேன்.. தேன்.. தித்திக்கும் தேன்..
              தேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். இயற்கையின் கொடைகளில் தேனும் ஒன்று. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நம் சித்தர்கள் தங்களின் தவப்பயனால் கண்டறிந்த சித்த மருத்துவத்தில் தேனை துணை மருந்தாக பயன்படுத்துகின்றனர். தேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாது. தன்னுடன் சேர்ந்த பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கும்.

சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.

தேனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு தேனுக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள உண்டு.
மலைத்தேன்
இது மலைப் பகுதிகளில் பாறைகளின் இடுக்குகளிலும் பெரிய மரக் கிளைகளிலும் பெரும் கூடாக கட்டியிருக்கும். இந்த வகைத் தேன் அரிய மருத்துவ குணங்களைக் கொண்டது. சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

நாள்பட்ட சளி, இருமல் போன்றவற்றிற்கும் உடலை வலுப்படுத்தவும், நோயுற்றவர்களுக்கு உடல் நலம் பேணவும் மலைத்தேன் சிறந்த மருந்தாகும். நல்ல குரல் வளத்தைக் கொடுக்கக்கூடியது.

கொம்புத்தேன்

மரங்களின் பொந்துகளில் கூடு கட்டும். இந்த தேனீக்கள் சிறிய கொசுவைப் போல் காணப்படும். இந்த வகையான தேன் கிடைப்பது மிகவும் அரிது.

புற்றுத்தேன்

கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

மனைத்தேன்

இது வீடுகளில் கட்டுகின்ற தேன். பசியினைத் தூண்டும். உடலை வலுவாக்கும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

பொதுவாக தேன் சிறந்த கிருமி நாசினி. புண்களை ஆற்றும். நெருப்பினால் உண்டான காயங்களை குணப்படுத்தவும், கொப்புளங்கள் ஏற்படாமல் இருக்கவும் இது பயன்படுகிறது.

நல்ல தூக்கத்திற்கு

இரவு படுக்கைக்கு செல்லும்முன் தேன் 2 ஸ்பூன் பாலிலோ, அல்லது நீரிலோ கலந்து அருந்திவந்தால் நல்ல சுகமானஉறக்கம் வரும்.

தேன் பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகளை போக்கும். பற்களுக்கு பலம் தரும்.

தேனை தினமும் பல், ஈறுகளில் தடவி வந்தால் பற்கள் சுத்தமாகவும், பளிச்சென்று காணப்படும். பல் ஈறுகளில் நுண் கிருமிகள் வளருவதைத் தடுக்கும்.

தேனை வாய்புண் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும். வயதானவர்களுக்கு தேன் உடல் வலிமையையும் சக்திøயயும் கொடுக்கும்.

நீண்ட நாள் சளி நீங்க

பூண்டு எண்ணெய்.     1 ஸ்பூன்

தேன்                                   3 ஸ்பூன்

கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தி வந்தால் சளித்தொல்லை நீங்கும் .

தேனை அதிக அளவு எடுத்து குடிக்கக் கூடாது. சிறிது சிறிதாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நாவினால் நக்கி சாப்பிட்டால் உமிழ் நீருடன் தேன் சேர்ந்து உடலுக்குள் செல்கிறது.

முகப் பொலிவிற்கு

2 ஸ்பூன் தேன் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள கழிவுகள் வெளியேறும். முகம் பொலிவு பெறும். (தேனை தடவும்போது ரோமத்தில் படாதவாறு தடவவேண்டும். ரோமத்தில் பட்டால் ரோமம் வெளுத்துப் போகும்)

வறண்ட சருமம் மென்மையாக

தேன் 1ஸ்பூன்

பால் 1 டம்ளர்

இரண்டையும் குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் மேனி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.

தேன் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் பன்னீர் 100மிலி கலந்து தோலின் மீது தடவினால் தோல் பளபளக்கும்

புதுத்தேன்

நிறைந்த ஆயுளையும் அழகையும் கொடுக்கும் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நெஞ்சில் கபம் உண்டாகும்.

பழைய தேன்

· இது புளிப்பும் இனிப்புமாயிருக்கும் இதனால் வாதப் பெருக்கம், வயிற்றெரிச்சல் உருவாகும்.

· தேன் மருந்துகளுக்கு சிறந்த அனுபானமாக துணை மருந்தாக பயன்படும்.

· தேன் இதயத்திற்கு ஒரு சிறந்த மருந்து. இது மார்புவலி படபடப்பு ஆகியவற்றிற்கு நல்லது.

· தேன் எளிதில் சீரணமாகும். எனவே செரியாமையைத் தீர்க்க கிடைத்த வரப்பிரசாதம்.

· தேன் இரைப்பையில் அதிக அமிலம் சுரப்பதை குறைக்கும். பசியின்மையை, வாய் குமட்டல், நெஞ்செரிச்சல் குணமாகும்.

· இது சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு குடலில் உள்ள கழிவு பொருட்களை வெளியேற்றும்.

வெதுவெதுப்பான நீர் 1/2 டம்ளர் எடுத்து அதில் தேன் 1 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாற்றை சிறிது கலந்து காலையில் அருந்த வயிறு எரிச்சல் குணமாகும். மலச்சிக்கல் தீரும்.

· இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகப்படுத்த தேனே சிறந்த மருந்தாகும்.

· தேனில் அதிகளவு இரும்புச் சத்து, செம்பு, மாங்கனீசு உள்ளது. வெளுப்பு நோயைக் குணமாக்கும்.

· நுரையீரல் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும்.

· இது சிறந்த கோழையகற்றி. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சிறந்தது.

· ஆஸ்துமா நோயாளிகள் 1 டம்ளர் வெதுவெதுப்பானவெந்நீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் வறட்டு இருமல் ஆஸ்துமா குணமாகும்.

© bujji

பருவநிலை மாற்றத்தால் தேனீக்கள்......

 பருவநிலை மாற்றத்தால் தேனீக்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் துறைத் தலைவர் பேராசிரியர் முத்துச்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் தாவரம், விலங்கு சிற்றினங்களில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், 2050க்குள் 15 முதல் 37 சதவீத உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளது.
மனிதன் இயற்கைக்கு செய்த இடையூறால், உலகம் கடும் வெப்ப மாறுபாட்டை தற்போது சந்தித்து வருகிறது. தாவரங்களில் நடக்கும் அயல் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள் தான் உறுதுணையாக உள்ளன.
தற்போதைய புவிவெப்ப மாற்றத்தால் இந்த வகை உயிரினங்கள், பல்வகை நோய் தாக்குதலால் அழிந்து வருகின்றன. பருவநிலை மாற்றங்களால் ஜெர்மனியில் 25 சதவீதமும், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் 70 சதவீதமும் தேனீக்கள் அழிந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதே போன்று, இந்தியாவிலும், கடந்த ஐந்தாண்டுகளில் 20 முதல் 35 சதவீத தேனீக்கள் அழிந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதும், ரத்தம் உறிஞ்சும் ஒட்டுண்ணி பூச்சிகள், தேனீக்களை அழிப்பதும் இதற்கு காரணமாகும்.
பருவநிலை மாறுபாட்டால் தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, தாவரங்களின் அயல் மகரந்த சேர்க்கை பாதிக்கப்படுகிறது.
இதனால், இவற்றை நம்பியிருக்கும் விவசாயிகள், தொழில் முனைவோரும் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதனால், உயிரினங்களின் பல்லுயிர் பரவல் தன்மை குறைந்து வருகின்றது.
எனவே, இது குறித்த ஆய்வு மேற்கொண்டு மாற்று ஏற்பாட்டை செய்யவேண்டியது மிக அவசியமானது என்றார்.

Tuesday, March 9, 2010

Bee keeping

Training sessions at TNAU 


COIMBATORE: The Tamil Nadu Agricultural University will offer training in “Bee Keeping” on the 6th of every month at the Department of Entomology.
According to a university release, in the case of the 6th of the month being a Government holiday, the training will be offered on the next working day.
The first training session will begin on May 5.
Aspects
Hands-on training will be imparted on the following aspects: identification of bee colonies and rearing them, artificial group rearing of bees, queen bee rearing and production techniques, natural enemies of bees and their management and Italian bee rearing techniques.
Registration will be on first-come-first-served basis for 30 persons.
Fee
Selection will be confirmed to the candidates. Selected candidates should pay a fee of Rs. 150 on the day of training.
Fee includes lunch.
Interested candidates can register their names in advance by post / phone or e-mail at the Department of Entomology.
Contact
For details contact Head, Department of Entomology, Tamil Nadu Agricultural University, Coimbatore – 641003. Candidates can also call 0422-6611214 / 6611414 or e-mail to entomology@tnau.ac.in.
Thanks 4 Hindu

Monday, March 8, 2010

தேனீக்கள்...

உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி (Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.


தேனீக்களின் பூர்வீக பூமி ஆப்பிரிக்காவாகும். அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் பிறகு ஆசியாவிற்கும் பரவின. காலனி ஆதிக்கத்தின் போது அமெரிக்காவிற்கும் பரவி இன்று அன்டார்டிகாவை தவிர்த்து பூமியின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா தட்பவெட்ப நிலைகளிலும் தேனீக்கள் காணப்படுகின்றன. 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தேனீக்களின் உடற்படிவம் மரப்பிசினிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தேனீக்களின் அமைப்பிலேயே மாற்றமின்றியே காணப்படுகின்றன.

தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

1. இராணித் தேனீ (Queen-Productive Female)

2. ஆண் தேனீக்கள் (Drone)

3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)

இம்மூன்றும் மூன்று விதமான உடல் அமைப்பையும் மூன்று விதமான செயல் பாடுகளையும் உடையதாகும். வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டு இவற்றால் உருவாக்கப்படும் கூடு என்ற இவற்றின் ஒரு சமுதாயம் (Colony) நமக்கு விடை பகர முடியாத பல செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும். பொதுவாக ஒரே உயிரினத்தில் பாலினத்தை வேறுபடுத்திக் காட்டும் சில வேறுபாட்டைத் தவிர பெரிய வேறுபாடுகள் எதுவும் காணப்படுவதில்லை. ஆனால் இந்த தேனீக்கள் இனத்தில் விதிவிலக்காக உள்ளுறுப்புக்கள், வெளியுறுப்புக்கள் மற்றும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க வேறு பல வித்தியாசமான அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றை வரிசைப் படுத்தி காண்போம்.

பொதுவான வேறுபாடுகள்.

இராணித் தேனீ ஒரு கூட்டில் ஒன்றே ஒன்றுதான் இருக்கும். ஆண் தேனீக்கள் நூற்றுக்கணக்கிலும் வேலைக்காரத் தேனீக்கள் ஆயிரக் கணக்கிலும் இருக்கும். இராணித் தேனீ மற்ற இரு வகை தேனீக்களைக் காட்டிலும் அளவில் பெரியதாகும். கூடுகளில் இருக்கும் மற்ற எல்லா தேனீக்களுக்கும் இதுதான் தாய் ஆகும். இவற்றால் மட்டுமே முட்டையிட்டு குஞ்சுகளைப் பொறிக்க இயலும். ஆண் தேனீக்கள் இராணித் தேனீக்களை விடச் சற்று சிறியதாகவும், வேலைக்கார தேனீக்கள் மற்ற இரு வகையை காட்டிலும் சிறியதாகவும் இருக்கும். இராணித் தேனீக்கு கொட்டக் கூடிய கொடுக்குகள் இருக்கும். அது இறப்பெய்தும் காலம் வரை மீண்டும் மீண்டும் வளரக்கூடியதாகும். ஆண் தேனீக்களுக்கு கொட்டக் கூடிய கொடுக்குகள் இல்லை. வேலைக்காரத் தேனீக்களுக்கு கொட்டக்கூடிய கொடுக்குகள் உண்டு. ஆனால் ஒரு முறை கொட்டியதன் பின்னர் திரும்ப வளருவதில்லை.

இராணித் தேனீ சராசரியாக மூன்று வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றது. ஆண் தேனீக்கள் இராணித் தேனீயுடன் உறவு கொண்டவுடன் உயிரிழக்கின்றன. இவை சராசரியாக 90 நாட்கள் வரை உயிர் வாழ்கின்றன. வேலைக்காரத் தேனீக்கள் சராசரியாக 28 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை உயிர் வாழ்கின்றன. ஆனால் குளிர் காலங்களில் 140 நாட்கள் வரையில் உயிர் வாழக்கூடியன. இராணித் தேனீ முட்டையிலிருந்து முழு வளர்சியடைந்து வெளிவர 16 நாட்கள் எடுத்துக்கொள்கின்றது. ஆனால் ஆண் தேனீக்களுக்கு 24 நாட்களும் வேலைக்காரத் தேனீக்களுக்கு 21 நாட்களும் ஆகின்றது. வேலைக்காரத் தேனீக்களுக்கு பூக்களிலிருந்து மகரந்தத் தூளைச் சேகரித்து கொண்டு வர அவற்றின் பின் காலில் மகரந்தக் கூடை (Polan Basket) என்ற உறுப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பு இராணித் தேனீ மற்றும் ஆண் தேனீக்களுக்கு இல்லை. வேலைக்காரத் தேனீக்களுக்கு பூக்களின் குளுகோஸைத் தேனாக மாற்றக் கூடிய தேன் பை எனும் உள்ளுறுப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பும் மற்ற இரண்டு வகை தேனீக்களுக்கும் இல்லை. கூடுகட்ட பயன்படுத்தும் ஒரு வித மெழுகை உற்பத்தி செய்யும் சுரப்பி (Wax Gland) வேலைக்காரத் தேனீக்களுக்கு மாத்திரமே அமைந்துள்ளது. மற்ற இரு வகை ஈக்களுக்கும் இல்லை. இது மட்டுமல்லாது மற்ற சில அம்சங்களும் உண்டு. இப்போது நாம் தேனீக்களை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

இராணித் தேனீ (Queen)

ஒரு உறையில் ஒரு வாள். இதுதான் இராணித் தேனீயின் சித்தாந்தம். ஒரு கூட்டில் ஒரு இராணித் தேனீதான் இருக்க முடியும். இது அளவில் மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பறந்து வெளியில் செல்கின்றது. தரை மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திற்கு மேல் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் உறவு கொள்கின்றது. அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும். இவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகினறது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது. இவை தங்கள் இறுதி காலத்தில் கிழப் பருவமெய்தி முட்டையிடும் தகுதியை இழந்துவிடுகின்றன. இதை அறிந்த உடன் வேலைக்காரத் தேனீக்கள் புதிய இராணித் தேனீயை உருவாக்கும் முயற்சியில் துரிதமாக இறங்கிவிடுகின்றன. இராணித் தேனீயை உருவாக்க அறை விரைவாக பழுது பார்க்கப்படுகின்றது. கடைசி நேரத்தில் இடப்பட்ட முட்டைகள் சில தேர்ந்தெடுக்கப்பட்டு இராணித் தேனீயை உருவாக்க கட்டப்பட்ட பெரிய அறைகளில் முட்டைகளை இட்டு விரைவில் பொறித்து வெளிவர ஆவணச் செய்யப்படுகின்றது.

முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்களுக்கு தொடர்ந்து ராயல் ஜெல்லி (Royal Jelly) என்னும் உயர் தர ஊட்டச்சத்து திரவம் தரப்படுகின்றது. இந்த திரவம் தொடர்ந்து ஊட்டப்படும் லார்வா இராணித் தேனீயாக உருமாற்றம் அடைகின்றது. இந்த ராயல் ஜெல்லிதான் ஒரு முட்டை வேலைக்காரத் தேனீக்களின் பிறப்பையும் இராணித் தேனீயின் பிறப்பையும் தீர்மானிக்கும் அம்சமாக விளங்குகின்றது. இந்த திரவம் வேலைக்காரத் தேனீக்களின் சுரப்பியிலிருந்து சுரக்கக் கூடியதாகும். இந்த திரவம் வேலைக்கார தேனீக்களின் லார்வாக்களுக்கு முதல் இரண்டு நாட்கள் மாத்திரமே தரப்படுகின்றது. ஆனால் இந்த ராயல் ஜெல்லி மட்டுமே இராணித் தேனீயின் வாழ்நாள் முழுவதுமான உணவாகும். அரசர்கள் உண்ணும் அறுசுவை உணவைப் போன்றே இவற்றிற்கும் அரசு மரியாதையுடன் முக்கியத்துவம் தரப்பட்டு இந்த உணவு வழங்கப்படுகின்றது. இவ்வாறு தொடர்ந்து இந்த திரவம் கொடுக்கப்படுவதன் மூலம் இவை துரித வளர்சியடைகின்றன. மற்ற தேனீக்களைக் காட்டிலும் 5 முதல் 8 நாட்கள் முன்பாகவே பொறித்து வெளிவருகின்றன. முதலாவதாக வெளிவரும் இராணித் தேனீ போட்டி மனப்பான்மையால் பொறித்து வெளிவரக்கூடிய நிலையில் இருக்கும் மற்ற இராணித்தேனீக்களின் லார்வா அறைகளைத் தாக்கி சேதப்படுத்துகின்றது. இவற்றின் பிறப்பே வாழ்வா! சாவா! என்ற போராட்டத்தின் துவக்கமாகவே அமைந்து விடுகின்றது. வெளிவந்துவிட்ட தன் சகோதரி தேனீக்களுடன் தலைமைத் தனத்திற்காக சண்டையிட்டு ஒன்று இறக்கின்றன அல்லது மற்றவற்றை வெற்றிப்பெற்று இராஜ வாழ்க்கையை எதிர் நோக்கி கூடு திரும்புகின்றன. கடமைக்கு முன்பாக பாசத்திற்கு வேலை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பழைய தாய் கிழ இராணித் தேனீயும் புதிய இராணித் தேனீயால் கொல்லப்படுகின்றது. இத்தகைய போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி பெற்று வரும் இராணிக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்து தங்கள் கடமையை கண்ணும் கருத்துமாகச் செய்திட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருப்பதனால் அங்கே புதிய இராஜ்ஜியத்தில் தேனாறு பாயத் துவங்குகின்றது.

ஆண் தேனீ (Drone)

அடுத்து ஆண் தேனீக்களைப் பற்றிப் பார்ப்போம். இவற்றை ஆண் ஈக்கள் என்பதை விடச் சோம்பேறி ஈக்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இவை பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.

நான் ஆண் என்று வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து சமர்த்தாக நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன. இவை செய்யக் கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதியதாக பொறித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன. இவை பறந்த வண்ணம் இராணித் தேனீயுடன் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டவுடன் இவற்றின் சிறகுகள் உதிர்ந்து கீழே விழுந்து இறந்துவிடுகின்றன. மேலும் சில பொழுது இவற்றின் சோம்பேறித் தனத்திற்கு பரிசாகக் கூட்டில் உணவு பற்றாக் குறை ஏற்படும் போது பலவந்தமாக, நிர்கதியாக கூட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பட்டினியால் சாகடிக்கப்படுகின்றன. மற்றவரை அண்டி வாழ்பவரின் நிலை அதோ கதிதான் என்பது மனித இனத்திற்கும் பொதுவானதுதானே.

வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee)

மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது.

மேலும் இவற்றின் பின்புறக் கால்களில் அமைந்த மகரந்தக் கூடை என்னும் உறுப்பின் மூலம் மகரந்தச் சேகரிப்பும் இவற்றைக் கொண்டு நடை பெருகின்றன. கூட்டின் வெப்ப நிலையை குறைக்கவும் தேவையின் போது குளிர் காலங்களில் கூட்டில் வெப்ப நிலையை ஏற்படுத்துவதும், எதிரிகள் தங்கள் கூட்டைத் தாக்க வரும் போது தங்கள் கொடுக்கினால் எதிரியைக் கொட்டி பாதுகாக்கவும் செய்கின்றன. இவை ஒரு முறை எதிரியை கொட்டியவுடன் இறந்து விடுகின்றன. இவற்றின் கொடுக்கு அதுனுடைய விஷப் பையுடன் இணைந்து இருப்பதனால் கொட்டும் போது அதன் கொடுக்கு எதிரியின் உடலில் குத்தப்பட்டு அங்கேயே தங்கிவிடுவதனால் அவற்றுடன் இணைக்கப்பட்ட விஷப் பையின் வாய் சிதைந்து விஷம் அவற்றின் உடலில் பரவி உயிரிழக்கக் காரணமாக அமைந்து விடுகின்றது. தங்கள் கூட்டைக் காக்கும் போராட்டத்தில் இவை உயிரைத் தியாகம் செய்கின்றன. கூட இருந்தே கொல்லும் நோய் என்றுச் சொல்வார்கள். இங்கோ கூட இருந்தே கொல்லும் விஷம்! இதுதான் தேனீக்களின் நிலை.

தேன் கூட்டின் அமைப்பு...
"ஆயிரம் தச்சர்கள் கூடி உருவாக்கும் மண்டபம்", என்று தமிழில் சொல்லப்படும் உவமைக்கு உரியவை தேனீக்கள் கட்டும் கூடாகும். தேனின் கூடு வேலைக்காரத் தேனின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றன. இதுவே மனிதர்களின் பல பயன்பாட்டிற்கு உதவும் தேன் மெழுகு ஆகும். இவற்றின் கூடு பொதுவாக மரங்கள், மலைக் குகை, மனிதர்கள் எளிதில் அடைய முடியாத கட்டிடத்தின் முடுக்கு, பொந்துகள் போன்றவற்றில் கட்டப்பட்டிருக்கும். இவற்றின் கூட்டு அறை மிக சரியாக அருகோண வடிவத்தில் அமைந்துள்ளது. கலைப் பொருட்களை நாம் எப்படி நேர்தியாக செய்வோமோ அந்த அளவிற்கு மிக நேர்தியாகக் பார்க்க ரசனையை அளிக்கக் கூடிய முறையிலே கூட்டைக் கட்டுகின்றன. கணித ரீதியாக அருகோண வடிவம் என்பது அதிக எடையைத் தாங்கும் அமைப்புடன் விளங்குகின்றன. பொறியியல் அறிந்த ஈக்கள் போலும்!

இராணித் தேனீயின் லார்வா அறை மட்டும் நிலக்கடலையின் வடிவிலும் மற்றவற்றைக் காட்டிலும் சற்றுப் பெரியதாயிருக்கும். கூட்டின் மேற்பகுதியில் தேனின் சேமிப்பு அறை அமைந்துள்ளது. இவற்றின் அறை சுவற்றின் தடிமன் ஒரு அங்குலத்தில் ஆயிரத்தில் இரண்டு பகுதி உடையதாயிருக்கும். இவை இந்த அளவிற்கு மெல்லியதாக இருப்பினும் அவை அதன் எடையைக் காட்டிலும் 25 மடங்கு எடையைக் தாங்கக் கூடிய திறன் உடையதாயிருக்கும். இவற்றின் கூடு முழுதும் இத்தகைய துளை அறைகளை கொண்டதாயிருக்கும். நாட்கள் கூடக் கூட இவற்றின் கூட்டின் அளவும் பெரியதாகிக் கொண்டே செல்கின்றது. ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ஈக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. மனிதர்களோ ஒரு தலைமைக்கு கட்டுபட்டு நடக்கக் கூடிய தேனீக்களிடம் பாடம் படிக்க வேண்டிய நிலையில் தான் இருக்கின்றோம். என் கடமை பணி செய்து கிடப்பதே! என்பதே இவற்றின் தாரக மந்திரம் ஆகும். ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும். இவற்றின் கூடு அதிகமான ஈக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்களால் மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில என்ஸைம்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.

இனப்பெருக்கம்...
லார்வாக்களுக்கு ஒரு நாளைக்கு 1200 முறைகளுக்கு மேல் உணவளிக்கப்படுகின்றது.

இராணித் தேனீயின் மூலம் அறைக் கூடுகளில் அறைக்கு ஒன்று வீதம் இடப்படும் முட்டைகள் மூன்று நாட்களுக்குப் பிறகு பொறித்து லார்வாக்கள் வெளிவருகின்றன. இராணித் தேனீக்கென்று வித்தியாசமான வடிவில் நிலகடலை வடிவத்தில் கூடு கட்டப்படுகின்றன. லார்வா நிலையில் அவற்றிற்கு வேலைக்காரத் தேனீக்களினால் ஒருநாளைக்கு 1200 முறைக்கு மேல் உணவு அளிக்கப்படுகின்றது. தங்களது சுய நலத்திற்கல்லாமல் தங்கள் காலனியின் நலனையே கருத்தில் கொண்டு புதிய சந்ததிகளை உருவாக்க வெறித்தனமாக செயல்படும் இந்த செயல் உண்மையில் சிந்திக்கத் தக்க விஷயமாகும். முதல் இரண்டு நாட்களுக்கு வேலைக்கார லார்வாக்களுக்கு ராயல் ஜெல்லி என்னும் உயர் தர புரத உணவு அளிக்கப்படுகின்றது. இது வேலைக்காரத் தேனீக்களின் சுரப்பிகளிலிருந்து சுரக்கின்றது. அதன் பிறகு மகரந்தத் தூள் மற்றும் தேன் ஆகியவை உணவாக அளிக்கப் படுகின்றது. ஆனால் இராணித் தேனீயின் லார்வாக்களுக்கு ராயல் ஜெல்லி மாத்திரமே உணவாக முழு வளர்சி அடையும் வரை அளிக்கப்படுகின்றது. இத்தகைய வேற்றுமை லார்வா பருவத்திலிருந்தே நடைமுறைப்படுத்தப் படுகின்றன. இத்தகைய உயர் தர உணவு தொடர்ந்து கொடுக்கப்படுவதன் மூலம் இவை துரித வளர்சியடைகின்றன. அதன் பிறகு லார்வா முழு வளர்சி நிலையை அடைகின்றது. பின் அறை கூட்டின் மேல் பகுதி மெழுகினால் சீல் வைக்கப்பட்டு மூடப்படுகிறது. அதன் பிறகு அவை PuPa என்னும் கூட்டுப் புழு நிலையை அடைந்து பிறகு முழு வளர்ச்சி அடைந்த நிலையில் அறைக் கூட்டின் மேல் பகுதியை உடைத்து வெளி வருக்கின்றன.

இராணித் தேனீ முழு வளர்சியடைந்து வெளிவர 16 நாட்களும் வேலைக்காரத் தேனீக்களுக்கு 21 நாட்களும் ஆண் தேனீக்களுக்கு 24 நாட்களும் ஆகின்றன. பொதுவாக எல்லா நாட்களிலும் சில நூறு அறைகளிலாவது லார்வா நிலையில் உள்ளவைகளுக்கு உணவு அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்.


புதிய வரவுகள்...
தேனீக்கள் நிமிடத்திற்கு 11,400 முறை சிறகடிக்கின்றது. இவ்வளவு வேகத்தில் சிறகை அசைப்பதனால் ஏற்படும் சப்தம்தான் ஈக்களின் ரீங்காரம்.

வெளி வந்தவுடன் புதிய தேனீக்கள் மூன்று வாரங்கள் வரை கூட்டிற்குள்ளேயே வேலையில் அமர்த்தப்படுகின்றன. கூடுகளைப் பராமரிக்கவும், பழைய லார்வா அறைகளைத் தூய்மைப்படுத்தி அடுத்து முட்டையிட ஏதுவாக்கி வைக்கவும், லார்வாக்களுக்கு உணவளித்து பராமரிக்கவும், வேலைக்காரத் தேனீக்களினால் கொண்டுவரப்படும் தேனை இவை தங்கள் வாயில் பெற்று அதை அதற்கென்று இருக்கும் பிரத்யேகமான அறையில் நிரம்பியதன் பின்னர் அதில் காற்று புகா வண்ணம் இறுக்கமாக (airtight) சீல் வைக்கின்றன. மேலும் இவை கூட்டின் வெப்பம் மிகைத்து விடும் போது நீரை விட்டு சிறகை தொடர்ந்து அசைப்பதன் மூலம் காற்றோட்டத்தை ஏற்படுத்தி வெப்ப நிலையை குறைக்கின்றன. கடுமையான குளிர் காலங்களில் இவை ஒன்றுடன் இறுக்கமாக இணைந்து கூட்டில் இருக்கும் லார்வாக்கள் முறையாக வளர்சியடைய வகை செய்கின்றன. இறுதியாக மூன்று வாரங்ககளுக்குப் பிறகு இவை வெளியே சென்று தேனைச் சேகரிக்க அனுப்பப்படுகின்றன.

தேன் சேகரிப்பு

தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரைப் பயணிக்கும் திறன் கொண்டதாகும்.


தேனீக்கள் ஏன் தேனை சேமித்து வைக்கின்றன? என்ற கேள்விக்கு விடை தேடிச் சென்றால் நமக்கு கிடைக்கும் பதில் மலர்கள் பூக்காத உணவு உற்பத்திக்கு வழியே இல்லாத குளிர் காலத்திற்காக இவைகளால் முன் கூட்டியே சேகரிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைதான் தேன் சேகரிப்பு ஆகும். தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும். ஒரு வருடத்தில் இவைகளினால் கூட்டிற்கு 450 கிலோ எடையுடைய மலரின் குளுகோஸ், மரங்களிலிருந்து கொண்டு வரப்படும் புரொபோலிஸ் என்னும் பிசின், நீர் மற்றும் மகரந்தம் கொண்டு வரப்படுகின்றன என்று சொன்னால் ஒரு கூட்டில் வேலைக்காரத் தேனீக்களின் பங்களிப்பு என்னவென்பதை நம்மால் உணர முடிகின்றது.

சில வகைத் தேனீக்கள் தங்கள் உணவிற்காக செல்லும் தொலைவை நாம் அறிந்தால் நம்புவதற்குக் கடினமாக இருக்கும். ஏன் என்று சொன்னால் தேனீக்கள் சற்றேறக் குறைய ஒரு லட்சம் கி.மீ வரை பயணித்து இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து குளுகோஸை எடுத்துப் பிறகு சரியாக தங்கள் கூடு திரும்புகின்றன என்று சொன்னால்

இறைவா! உன்னுடைய அற்புதம் தான் என்ன அற்புதம். இவ்வளவு தொலைவான தூரங்களிலிருந்து மிகச் சரியாக கூடு திரும்பும் இந்த ஆற்றல் எங்ஙனம் இவற்றிற்கு சாத்தியம் ஆயிற்று? இதோ நம் இறைமறை பதில் அளிக்கின்றது..

தேனீக்கள் சரியான பாதையில் திரும்பி கூட்டிற்கு வர எல்லாம் வல்ல இறைவன் பொறுப்பேற்றுக் கொண்டான் என்பதை மேற்கண்ட இறை வசனம் தெளிவுபடுத்துகின்றது. இதை மறுக்கக் கூடியவர்கள் தங்கள் பகுத்தறிவைக் கொண்டு பதில் சொல்லட்டும். இதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நிறைய அத்தாட்சிகளை ஆக்கியிருக்கின்றான் நம் இறைவன்.

இவை இவ்வளவு தொலைவிலிருந்து சேகரித்து வரும் மலரின் குளுகோஸ் ஏறக்குறைய ஒரு பவுன்டு எடையுடைய தேனை உற்பத்தி செய்ய போதுமானதாகும். நம் இறைவன் மகா தூய்மையானவன். நம் இறைவன் தான் நாடியவைகளுக்கு ஆற்றலை மிகைப்படுத்தக் கூடியவன் என்பது மீண்டும் இங்கே நிரூபனமாகின்றது. இவை முதலில் கூட்டை விட்டு வெளியில் சென்று மலர்களின் உள்ளே இருக்கும் மலரின் மதுவை(nectar) உறிஞ்சி உட்கொள்கின்றன. பின்னர் மலரின் மகரந்தத்தையும் சேகரித்து திரும்பி கூட்டிற்கு வருகின்றன. திரும்பிய உடன் மகரந்தத் தூளை நேரடியாக அறைக் கூட்டில் இட்டு சீல் வைக்கின்றன. இந்த மகரந்தத் தூள் நிறைய புரதம் மற்றும் தாதுத் பொருட்கள் நிறைந்ததாகும். மேலும் இவற்றில் 10 க்கு மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன. இதைத் தேனுடன் கலந்து லார்வாக்களுக்கு கொடுக்கின்றன. பின்னர் கூட்டை பராமரிக்கும் தேனீக்களின் வாயில் இவை வயிற்றிலிருந்து வெளிகொணர்ந்த தேனை கொடுக்கின்றன. இவை ஒரு துளி தேனை வெளியேற்ற 50 முறை வயிற்றிலிருந்த கக்குகின்றன. இவை வெளியில் ஏதேனும் புதிய மலர் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை துல்லியமாக ஒரு வித்தியாசமான நடன அசைவின் மூலம் மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கின்றன.

நடன அசைவில் அசாதாரண மொழி...

தேனீக்கள் தங்கள் உணவிற்காக வெளியில் சென்று ஏதேனும் புதிய உணவாதாரத்தைக் கண்டறிந்தால் கூட்டிற்குத் திரும்பி அந்த இடத்தைப் பற்றிய துல்லியமான தகவல்களை வித்தியாசமான உடல் அசைவின் மூலம் தெரிவிக்கின்றன. உதாரணமாக உணவின் இருப்பிடம் 100 கஜத்திற்கு(yards) உட்பட்ட இடத்தில் ஒரு தேனீயால் கண்டுபிடிக்கப்பட்டால் அது முதலில் அந்த மலரின் குளுகோஸை உறுஞ்சி தன் தேன் பையில் சேகரித்து கூடு திரும்புகின்றன. திரும்பியவுடன் கூட்டில் முதலில் இரண்டு செ.மீ அளவிற்கு சிறிய வட்டமாக (round dance) சுற்றுகின்றது. பின்னர் படிபடியாக சுற்றை பெரிதாக்கி சுற்றுகின்றது. பின்னர் அந்த சுற்றுக்கு எதிர் திசையில் சுற்றுகின்றது. இப்போது அதனுடன் இணைந்து மற்ற ஈக்களும் அந்த நடனத்தில் இணைந்துக் கொள்கின்றன. பின்னர் புதிய இடத்தை கண்டறிந்த தேனீயால் கொண்டு வரப்பட்ட மலரின் மகரந்தம் மற்றும் மலரின் குளுகோஸ் போன்றவற்றின் வாசனையை நுகர்ந்து அது எத்தகைய தாவரம் என்பதை உறுதி செய்து கொள்கின்றன. பின்னர் கூட்டை விட்டு வெளியேறி 100 கஜத்திற்க்குள் பெரிய வட்டம் அடித்து உணவின் இருப்பிடத்தைக் கண்டறிகின்றன. இதே நேரத்தில் 100 கஜத்திற்கு அப்பால் உணவாதாரம் இருக்குமேயானால் தற்போது வேறுவிதமாக நடனத்தை அரங்கேற்றுகின்றன. தங்கள் பின்புறத்தை அசைத்தபடி(waggle dance) மையத்திலிருந்து நேராக சென்று பின்னர் அறைவட்டம் அடித்து அதற்கு எதிர் திசையில் அதைப் போன்றே சுற்றுகின்றன. மேலும் மிக அதிக தொலைவு என்றால் இவை சூரியனின் இருக்கும் திசையையும் உணவு இருக்கும் திசையையும் ஒரு காம்பசின் அமைப்பில் திசையை துல்லியமாக தெரிவிக்கின்றன. இவை கணிதம் அறிந்த ஈக்கள் என்று தவறாக நினைக்க வேண்டாம். எல்லாம் நம் இறைவன் ஜீன்களைக் கொண்டு நடத்தும் ஜால வித்தைகள்தான் இவைகள்.

இந்த முறையில் 10 கிலோ மீட்டர் தொலைவின் இருப்பிடத்தை கூட இவைகளினால் இந்த அதிசய முறையினால் மற்றவற்றிற்கு தெளிவுபடுத்த இயலுகின்றது. யார் இவைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தது? என்ன ஒரு திட்டமிட்ட பிரமிக்க வைக்கும் செயல்பாடுகள். இத்தகைய நடன அசைவுகளை வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளிலும் அவைகளினால் எப்படி அறிந்துக் கொள்ள முடிகின்றது என்பது இதுவரை புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.

தவறுதலின் பலன்தான் கில்லர் தேனீக்கள் (KILLER BEE)

1950 ஆண்டு பிரேசில் விஞ்ஞானிகளுக்கு அதிக தேன் கொடுக்கக் கூடிய ஐரோப்பிய தேனீக்களையும் அதிக வெப்பத்தைத் தாங்கி தேனை உற்பத்தி செய்யும் ஆப்ரிக்கத் தேனீயையும் சேர்த்து கலப்பினம் செய்தால் தங்கள் நாடான பிரேசில் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஒரு ரகத்தை உருவாக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவாக புதிய ரகம் உருவாக்க ஆப்பிரிக்க இராணித் தேனீக்கள் சிலவற்றை பிடித்து பிரேசில் கொண்டு சென்றார்கள். ஆனால் அவற்றில் சில ஈக்கள் தப்பித்து காட்டுக்குள் சென்றுவிட்டன. இந்த ஆப்ரிக்க தேனீக்கள் மிக அதிக அளவிற்கு பாதுகாப்பு உணர்வுக் கொண்டதாகும். மற்ற வகை தேனீக்களைக் காட்டிலும் மிக வேகமாக இவை பறக்கக் கூடியவை. இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகியது. இவை தங்கள் கூட்டை தாக்க வரும் எதிரிகளை மாத்திரம் அல்லாது அதன் சுற்று புறத்தில் வந்தால் கூட கொத்த ஆரம்பித்துவிடும். மற்ற தேனீக்களை விட எதிரி மூன்று மடங்கு தொலைவில் வரும் போதே இவை தாக்கும் தொழிலில் இறங்கி விடுகின்றன. ஆப்ரிக்காவின் அதிக வெப்ப நிலையைத் தாங்கிய இவைகளுக்கு தென் அமெரிக்கா கண்டத்தின் மிதமான வெப்ப நிலையை தாங்கி பரவிச் செல்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. இவற்றின் இராஜ்ஜியம் தங்கு தடையின்றி பரவிச் சென்றது. இவை வருடத்திற்கு 500 சதுர மைல்கள் வீதம் தங்கள் பரப்பளவை விஸ்திகரித்துக் கொண்டே செல்கின்றன. இதன் விளைவாக 1950ல் ஆரம்பித்த இவற்றின் பரவல் 1990ம் ஆண்டு அமெரிக்காவை எட்டிவிட்டது. 40 ஆண்டு காலத்தில் தென் அமெரிக்காவை கடந்து வட அமெரிக்காவை எட்டிவிட்டன. மேலும் இவை பரவிக்கொண்டே செல்கின்றன. இவற்றால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றார்கள். இவை 1990 ஆண்டு முதன்முதலாக அமெரிக்காவில் காணப்பட்டது. அவை டெக்ஸாஸிலிருந்து மெக்ஸிகோவிற்கும் பிறகு 1994ம் கலிஃபோர்னியா மகாணத்திற்கும் பரவின. உலக நாடுகளை அச்சுறுத்தி ஆக்கிரமிப்பு செய்யும் அமெரிக்கவில் இவை சப்தமின்றி தங்கள் ஆக்ரமிப்பைத் தொடர்கின்றன. இன்னும் 50 ஆண்டுகளில் முழு அமெரிக்காவும் ஆக்கிரமிக்கக் கூடிய அபாயம் இருக்கின்றது. மெக்ஸிகோவிலும் அர்ஜெண்டினாவிலும் இவைகளினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களும் உண்டு. அமெரிக்காவைப் பொறுத்தவரை உயிர்இழப்பு ஏற்படாவிடினும் 1990 ஆண்டு அதிகபடியான நபர்கள் இவற்றால் கடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டனர்.

தேன்

தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிருந்து கொண்டு வரும் குளுகோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சல் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும். தேனைக் கொண்டு மனிதர்கள் பயன் பெறவே எல்லாம் வல்ல நம் இறைவன் இவற்றை நமக்கு வசப்படுத்தி தந்துள்ளான். அவன் கருணையாளன்.

உலகம் முழுதும் தேனீக்கள் பொருளாதார ரீதியாக செயற்கை முறையில் (Bee Keeping) வளர்க்கப் படுகின்றது. நல்ல பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கக் கூடிய தொழிலாகவும் இது விளங்கிவருகின்றது. நல்ல ஆரோக்கியமான கூட்டில் 14 முதல் 23 கிலோ வரை தேன் சேகரிக்கப்படுகின்றது. இவை தங்கள் குளிர்கால உணவுத் தேவையைக் காட்டிலும் மிக கூடுதலாகும். இவற்றின் மிஞ்சிய தேன் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றின் உயிர் தேவைக்கான கொஞ்சம் தேன் விட்டு வைக்கப்படுகின்றது. உலகத்தின் தேன் தேவையை பெருமளவிற்கு செயற்கைத் தேன் வளர்ப்பின் மூலமே சரிகட்டப்படுகின்றது. 8 முதல் 10 பவுண்டு தேனை சேகரிக்கும் போது அந்த கூட்டிலிருநது 1 பவுண்டு எடையுடைய தேன் மெழுகு கிடைக்கின்றது. தேன் என்பது ஒரு தூய கார்போ-ஹைட்ரேட் உணவாகும். இவை பல மருத்துவப் பயன்பாட்டிற்கு உதவுகின்றன.

இது நிறைய கலோரி நிறைந்ததாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய இருமடங்கு எடையாகும்.

தேனின் இதர பயன்கள்

இந்த பூமிக் கோளின் தாவரப் பரவலுக்கு தேனீக்களின் பங்கு மிக இன்றியமையாததாகும். அமெரிக்காவில் மாத்திரம் நான்கில் ஒரு பங்கு தாவரம் தேனீக்களினால் இனப்பெருக்கம் அடைகின்றன. இது அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்கும் உள்ள பொதுவான பயனாகும். இவற்றினால் ஏற்படும் பயன்பாட்டின் மதிப்பு அமெரிக்காவில் மாத்திரம் 200 பில்லியன் டாலர் வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணமாக குறிப்பிடுவதை குறையாக எண்ணுபவர்கள் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம். ஏன் என்று சொன்னால் இத்தகைய புள்ளி விபரங்களை சேகரிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இவர்களுக்கே போதிய கால அவகாசமும் பொருளாதாரமும் இடம் தருவதனால் இத்தகைய புள்ளி விபரங்கள் இவர்களிடமிருந்து கிடைக்கப்பெருகின்றன என்பதல்லாமல் வேறு ஒரு காரணமும் இல்லை.

இறைவனின் ஒப்பற்ற ஏற்பாட்டின்படி இவை நமக்கு இனிய தேனை மருத்துவப் பயன்பாட்டிற்கு நல்குவதோடு மட்டுமல்லாமல் வேறு பல அவசியத்தையும் இவற்றில் வைத்த நம் இறைவன் போற்றுதலுக்குறியவன்! புகழுக்குறியவன்! பகுத்தறிவு என்பது இறைவன் மனிதனுக்கு பிரத்யேகமாகக் கொடுத்துள்ளது போன்றே மற்ற சில உயிரினங்களுக்கும் இறைவன் தன் அருட்கொடையின் மூலம் வியக்கத்தக்க அம்சங்களை வைத்துப் படைத்துள்ளான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மனிதன் மற்ற எல்லாவற்றையும் விட தன்னை மிகப் பெரியதாக நினைக்கின்றான். இருப்பினும் தன்னை விட மிகத் தாழ்ந்த உயிரினமாக கருதப்படும் பல உயிரினங்கள் பெற்றிருக்கும் அபரிதமான ஆற்றல்கள் பல இவனைக் கொண்டு சாத்தியமற்றதாக இருப்பதை நடுநிலையோடு உணர்ந்து இறைவனின் வல்லமையை ஏற்று அவனுக்கு கட்டுப்பட்டு வாழ கல்வி ஞானத்தை வேண்டுவோம். நேர் வழி செல்வோம்.