பருவநிலை மாற்றத்தால் தேனீக்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் துறைத் தலைவர் பேராசிரியர் முத்துச்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் தாவரம், விலங்கு சிற்றினங்களில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், 2050க்குள் 15 முதல் 37 சதவீத உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளது.
மனிதன் இயற்கைக்கு செய்த இடையூறால், உலகம் கடும் வெப்ப மாறுபாட்டை தற்போது சந்தித்து வருகிறது. தாவரங்களில் நடக்கும் அயல் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள் தான் உறுதுணையாக உள்ளன.
தற்போதைய புவிவெப்ப மாற்றத்தால் இந்த வகை உயிரினங்கள், பல்வகை நோய் தாக்குதலால் அழிந்து வருகின்றன. பருவநிலை மாற்றங்களால் ஜெர்மனியில் 25 சதவீதமும், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் 70 சதவீதமும் தேனீக்கள் அழிந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதே போன்று, இந்தியாவிலும், கடந்த ஐந்தாண்டுகளில் 20 முதல் 35 சதவீத தேனீக்கள் அழிந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதும், ரத்தம் உறிஞ்சும் ஒட்டுண்ணி பூச்சிகள், தேனீக்களை அழிப்பதும் இதற்கு காரணமாகும்.
பருவநிலை மாறுபாட்டால் தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, தாவரங்களின் அயல் மகரந்த சேர்க்கை பாதிக்கப்படுகிறது.
இதனால், இவற்றை நம்பியிருக்கும் விவசாயிகள், தொழில் முனைவோரும் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதனால், உயிரினங்களின் பல்லுயிர் பரவல் தன்மை குறைந்து வருகின்றது.
எனவே, இது குறித்த ஆய்வு மேற்கொண்டு மாற்று ஏற்பாட்டை செய்யவேண்டியது மிக அவசியமானது என்றார்.
No comments:
Post a Comment