Thursday, April 15, 2010

ப்ளாஸ்டிக் உபயோகத்தை குறைப்போம்... நம் குழந்தைகளுக்கு நல்ல உலகை விட்டு செல்வோம் !!!


A life with plastics.....?anybody else bothered?
 இன்றைய சூழலில் ப்ளாஸ்டிக் என்பது நம் வாழ்வில் தவிர்க்க முடியாதஒன்றாக ஆகிவிட்டது. 
 இந்த ப்ளாஸ்டிக் என்னும் அரக்கனை பற்றி பலர்ஏற்கனவே எழுதி படித்திருப்பீர்கள்  
எனவே அதையே திருப்பி எழுதி போரடிக்கவிரும்பவில்லை.
இவ்வாறாக தவிர்க்க முடியாத ப்ளாஸ்டிக்கின் கெடுதல் பற்றி   பல விஷயங்கள் இருந்தாலும் 
 மிக முக்கியமானது


புற்றுநேயை வரவழைக்க கூடியது.
மரபணு குறைபாட்டை தோற்றுவிக்க கூடியது
ஆண்மை/பெண்மை குறைபாடு
உடல் பருமன்.


சில வருடங்களுக்கு முன் குழந்தைகளுக்கான பால் பாட்டிலை சோதித்ததில்அதில் வெளிப்படும் BPA (BisphenolA) என்னும் கெமிக்கல் பிறப்புறுப்பின்வளர்ச்சியினை பாதிக்குமாம்
எனவே உங்கள் குழந்தைக்கான பால் பாட்டில் வாங்கும் போது BPA Freeஎன்று போடப்பட்ட பாட்டிலாக வாங்குங்கள்.


நம் வீட்டில் நிறைய ப்ளாஸ்டிக் பொருட்கள் இருக்கும் ஆனால் ப்ளாஸ்டிக்கில்பல வகைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும்உபயோகப்படுத்த முடியாது. (இப்ப என்னதான் சொல்ற?). பெரும்பாலானப்ளாஸ்டிக் தயாரிப்புகளில் அதன் ஒரிஜினல் பெயர் சொல்லப்படுவதில்லை(சொன்னாலும் ஞாபகம் இருக்காது). இதனை சுலபமாக அறிய என்ன வழி?ப்ளாஸ்டிக்கிற்கும் ரீ-சைக்கிள் (மறுசுழர்ச்சி) முறையில் உருக்கி மறுபயன்பாட்டிற்காக பிரித்தறிய ஒரு எண் கொடுப்பார்கள். அதாவது ஒரேவிதமான ப்ளாஸ்டிக்கெல்லாம் ஒன்றாக உருக்கி மறு உபயோகத்திற்குபயன்படுத்துவார்கள். எந்த ஒரு டப்பா அல்லது பாட்டிலின் அடியிலும் இந்தஎண்ணை குறிப்பிட்டு இருப்பார்கள்.




இந்த எண்ணை வைத்து என்ன விதமான ப்ளாஸ்டிக் மேலும் எதற்க்காகஉபயோகப்படுத்தலாம் என அறியலாம். 









எண் 1 - PET


இது பொதுவாக நாம் உபயோகப்படுத்தும் குளிர்பானம், தண்ணீர் எல்லாபாட்டிலும் PET எனப்படும் இந்த வகை ப்ளாஸ்டிக்கினால் ஆனதுதான்.


இதுவரை எந்த தீங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை


எண் 2 – HDPE (High density Poly ethylene)







பைகள், தண்ணீர் பிடிக்கும் டப்பா, ஷாம்பூ ட்ப்பா... போன்றவற்றிற்குஉபயோகப்படுகிறது


இதுவரை எந்த தீங்கும் கண்டுபிடிக்கபடவில்லை


எண் 3 – PVC ( Poly vinyl chloride)









க்ளீனிங் பவுடர் டப்பா, உணவு பேக் செய்யப்படும் பொருள், பைப்புகள், ..........


உடலுக்கு பல வித தீங்குகளை விளைவிக்க கூடியது. Dioxin போன்ற பல நச்சுவாயுக்களை வெளிப்படுத்த கூடியது. சூடான பொருட்களை இதில் வைக்ககூடாது.


எண் 4 – LDPE ( Low Density poly ethylene)







இந்த எண் உடைய ப்ளாஸ்டிக்குகள் ப்ரிஜ்ஜில் ( ப்ரீஸரில்) உபயோகப்படுத்தஏற்றது. மற்ற ப்ளாஸ்டிக் வகையில் நச்சு வாயுக்கள் வெளியேறும் வாய்ப்புஉண்டு.


இல்லத்தரசிகள் கவனிக்க.....


எண் 5 – Poly propylene





குழந்தைகளுக்கான பாட்டில், சூடான பொருட்கள் வைக்க, மற்ற பொதுவானஉணவு பண்டங்கள் வைக்க ஏற்றது. மைக்ரோ வேவிலும் உபயோகபடுத்தலாம்.


எண் 6 – Polystyrene









உணவுப் பொருட்கள் வைக்க ஏற்றது அல்ல


எண் 7 – Others









குறிப்பிட்டு வகைப்படுத்த முடியாது. ஆனாலும் உபயோகப்படுத்தும் போதுகவனம் தேவை.


எதுவானாலும் என்னை பொருத்தவரை ப்ளாஸ்டிக் உணவு விஷயத்தில்நீண்ட நாள் உபயோகம் ஆபத்தே!.









ப்ளாஸ்டிக் உபயோகத்தை குறைப்போம்... நம் குழந்தைகளுக்கு நல்லஉலகை விட்டு செல்வோம்!

Wednesday, April 7, 2010

மரக்கன்றுகள் நடுவோம் வாங்க!

3 மீட்டரிலிருந்து 4 மீட்டர் இடைவெளி தூரத்தில் 1 அடி விட்டம் 2 அடி ஆழத்திற்கு குழி எடுக்க வேண்டும். எடுத்த மண் குழிக்குள் சரியா வண்ணம் சற்றுத் தள்ளிப் போட வேண்டும்.
அந்த மண் சில நாட்களுக்கு அப்படியே வெளியில் இருக்கட்டும். அதில் உள்ள கற்களையும், கூழாங்கற்களையும் நீக்கி அதோடு 3-ல் 1 பங்கு மக்கிய சாணிஉரம் சேர்க்க வேண்டும்.

மரக்கன்று நடும் நாள்:
பருவ மழைக்காலத்தில் மழை பெய்யும் ஒரு நாளையோ அல்லது மேகமூட்டமான ஒரு நாளையோ தேர்ந்தெடுத்து முதல் மழைக்குப் பிறகு நடவு செய்வது நல்லது.

சரியாக நடுதல் எப்படி?
நாற்றுப் பண்ணைகளில் இருந்து நாற்றைக் கொண்டுவந்து சேகரிக்க வேண்டும். அப்போது நாற்றுக்களைக் கவனமாக கையாள வேண்டும்.
* தண்டைப் பிடித்து தூக்காமல் பையின் அடிப்பாகத்தைப் பிடித்து தூக்குவது நன்று.
* நட வேண்டிய இடத்துக்கு நாற்றுக்களை கொண்டு வந்த பிறகு நேரத்தை வீணாக்க வேண்டாம்.
* வெளியில் இருக்கும் மண்ணில் சிறிதளவு குழிக்குள் தள்ள வேண்டும்.
* வேர்களை சுற்றியிருக்கும் மண்பிடிப்பு உதிர்ந்து விடாமல் பாலிதின் பைகளைக் கிழித்தோ அல்லது மண் தொட்டிகளை உடைத்தோ குழியில் வைக்க வேண்டும்.
* மீதமுள்ள மண்ணைக் குழிக்குள் போட்டுத் தள்ளி வேரைச் சுற்றி மண்ணை இறக்கவும். இதனால் நாற்று வளையாமல் நேராக நிமர்ந்து வளரும். மழைத் தண்ணீரும் அதிகம் தேங்காது.
* தண்ணீர் விடத்தோதாக கன்றைச் சுற்றி பள்ளம் இருந்தால் நன்று. சரிவான பகுதி எனில் மழை நீர் சேகரிப்பு குழிகளை பிறை வடிவில் கன்றுக்கு முன்பும் பின்பும் ஏற்படுத்தலாம்.
கவனம்:
* ஈர மண்ணில் செடியின் வேர்கள் அழுந்திப் பொருந்தியிருக்க வேண்டும்.
* ஈர மண்ணில் இருந்து வேர்கள் வெளியே தெரிந்தாலும், வேரைச் சுற்றியிருக்கும் மண் உதிர்ந்தாலும் கன்றுகள் காய்ந்துவிடும் வாய்ப்பு உண்டு.
* நாற்றை அதிக ஆழத்தில் வைத்து நட்டாலும் அது காய்ந்து கருகி விடும் என்பது ஞாபகமிருக்கட்டும். வேர்கள் வெளியே தெரியும்பிட நீட்டிக் கொண்டிருந்தால் அந்த நாற்றுக்கள் வளராது.
* வேர்கள் மடங்கி இருக்கும் வகையில் நட்டு விட்டால் நாற்று வாடி உயிரிழந்து விடும்.
* வளைந்த நாற்றுக்கள் நேராக வளராது.
* முதல் கோடை காலத்தில் நாற்றுக்கு தினமும் தண்ணீர் விட வேண்டும். இல்லாவிட்டால் உயிரிழக்க வாய்ப்பு அதிகம்.
* நடப்பட்ட கன்றுகள் பாதுகாக்கப் பட வேண்டும். அதிக அளவில் பொது இடத்தில் மரக்கன்றுகளை வளர்க்க முற்படும்போது முடிந்தால் காவலர் ஒருவரை போட்டு கன்றுகளைப் பாதுகாக்க வேண்டும்
.
கடற்கரையோரம் மரம் நடும் முறை:
* செம்மண்/களிமண், வண்டல், எரு கொண்டு கலவை தயார் செய்ய வேண்டும்.
* மூடாக்கு செய்ய தென்னை நார்க் கழிவு, இலை தழைகளைச் சேகரிக்க வேண்டும்.
* 1.5 அடி X 1.5 அடி அளவு குழி எடுக்க வேண்டும்.
* அதில் பாதியில் தயாராயுள்ள கலவை மண்ணைப் போட்டு நட வேண்டும்.
* நட்ட பின் உப்பங்காற்றிலிருந்து கன்றுகளைக் காப்பாற்ற கிழக்கு மேற்காக இருபுறமும் பனை ஓலை வைக்க வேண்டும்.
ஆடு, மாடு மேய்ச்சலில் இருந்து காக்க உள்ளூரிலேயே கிடைக்கும் குச்சி கோல்களைச் செடியைச் சுற்றிலும் சொறுகி வேலி உருவாக்க வேண்டும்.
கடற்கரையோரம் செடிகளைக் காப் பாற்ற இரண்டு ஆண்டுகளுக்காவது தண்ணீர் விட வேண்டும்.
நாற்று நன்றாக வளரும்போது கண்ணுக்கு எத்தனை அழகாய் காட்சி தருகிறது. இன்றைய மரக்கன்று நாளைய மரம் நாட்டின் வளம். மரங்களை குழந்தைகளைப் போல் வளர்ப் போம்
© bujji

Friday, April 2, 2010

தேன்.. தேன்...

 தேன்.. தேன்.. தித்திக்கும் தேன்..
              தேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். இயற்கையின் கொடைகளில் தேனும் ஒன்று. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நம் சித்தர்கள் தங்களின் தவப்பயனால் கண்டறிந்த சித்த மருத்துவத்தில் தேனை துணை மருந்தாக பயன்படுத்துகின்றனர். தேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாது. தன்னுடன் சேர்ந்த பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கும்.

சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.

தேனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு தேனுக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள உண்டு.
மலைத்தேன்
இது மலைப் பகுதிகளில் பாறைகளின் இடுக்குகளிலும் பெரிய மரக் கிளைகளிலும் பெரும் கூடாக கட்டியிருக்கும். இந்த வகைத் தேன் அரிய மருத்துவ குணங்களைக் கொண்டது. சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

நாள்பட்ட சளி, இருமல் போன்றவற்றிற்கும் உடலை வலுப்படுத்தவும், நோயுற்றவர்களுக்கு உடல் நலம் பேணவும் மலைத்தேன் சிறந்த மருந்தாகும். நல்ல குரல் வளத்தைக் கொடுக்கக்கூடியது.

கொம்புத்தேன்

மரங்களின் பொந்துகளில் கூடு கட்டும். இந்த தேனீக்கள் சிறிய கொசுவைப் போல் காணப்படும். இந்த வகையான தேன் கிடைப்பது மிகவும் அரிது.

புற்றுத்தேன்

கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

மனைத்தேன்

இது வீடுகளில் கட்டுகின்ற தேன். பசியினைத் தூண்டும். உடலை வலுவாக்கும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

பொதுவாக தேன் சிறந்த கிருமி நாசினி. புண்களை ஆற்றும். நெருப்பினால் உண்டான காயங்களை குணப்படுத்தவும், கொப்புளங்கள் ஏற்படாமல் இருக்கவும் இது பயன்படுகிறது.

நல்ல தூக்கத்திற்கு

இரவு படுக்கைக்கு செல்லும்முன் தேன் 2 ஸ்பூன் பாலிலோ, அல்லது நீரிலோ கலந்து அருந்திவந்தால் நல்ல சுகமானஉறக்கம் வரும்.

தேன் பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகளை போக்கும். பற்களுக்கு பலம் தரும்.

தேனை தினமும் பல், ஈறுகளில் தடவி வந்தால் பற்கள் சுத்தமாகவும், பளிச்சென்று காணப்படும். பல் ஈறுகளில் நுண் கிருமிகள் வளருவதைத் தடுக்கும்.

தேனை வாய்புண் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும். வயதானவர்களுக்கு தேன் உடல் வலிமையையும் சக்திøயயும் கொடுக்கும்.

நீண்ட நாள் சளி நீங்க

பூண்டு எண்ணெய்.     1 ஸ்பூன்

தேன்                                   3 ஸ்பூன்

கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தி வந்தால் சளித்தொல்லை நீங்கும் .

தேனை அதிக அளவு எடுத்து குடிக்கக் கூடாது. சிறிது சிறிதாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நாவினால் நக்கி சாப்பிட்டால் உமிழ் நீருடன் தேன் சேர்ந்து உடலுக்குள் செல்கிறது.

முகப் பொலிவிற்கு

2 ஸ்பூன் தேன் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள கழிவுகள் வெளியேறும். முகம் பொலிவு பெறும். (தேனை தடவும்போது ரோமத்தில் படாதவாறு தடவவேண்டும். ரோமத்தில் பட்டால் ரோமம் வெளுத்துப் போகும்)

வறண்ட சருமம் மென்மையாக

தேன் 1ஸ்பூன்

பால் 1 டம்ளர்

இரண்டையும் குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் மேனி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.

தேன் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் பன்னீர் 100மிலி கலந்து தோலின் மீது தடவினால் தோல் பளபளக்கும்

புதுத்தேன்

நிறைந்த ஆயுளையும் அழகையும் கொடுக்கும் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நெஞ்சில் கபம் உண்டாகும்.

பழைய தேன்

· இது புளிப்பும் இனிப்புமாயிருக்கும் இதனால் வாதப் பெருக்கம், வயிற்றெரிச்சல் உருவாகும்.

· தேன் மருந்துகளுக்கு சிறந்த அனுபானமாக துணை மருந்தாக பயன்படும்.

· தேன் இதயத்திற்கு ஒரு சிறந்த மருந்து. இது மார்புவலி படபடப்பு ஆகியவற்றிற்கு நல்லது.

· தேன் எளிதில் சீரணமாகும். எனவே செரியாமையைத் தீர்க்க கிடைத்த வரப்பிரசாதம்.

· தேன் இரைப்பையில் அதிக அமிலம் சுரப்பதை குறைக்கும். பசியின்மையை, வாய் குமட்டல், நெஞ்செரிச்சல் குணமாகும்.

· இது சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு குடலில் உள்ள கழிவு பொருட்களை வெளியேற்றும்.

வெதுவெதுப்பான நீர் 1/2 டம்ளர் எடுத்து அதில் தேன் 1 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாற்றை சிறிது கலந்து காலையில் அருந்த வயிறு எரிச்சல் குணமாகும். மலச்சிக்கல் தீரும்.

· இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகப்படுத்த தேனே சிறந்த மருந்தாகும்.

· தேனில் அதிகளவு இரும்புச் சத்து, செம்பு, மாங்கனீசு உள்ளது. வெளுப்பு நோயைக் குணமாக்கும்.

· நுரையீரல் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும்.

· இது சிறந்த கோழையகற்றி. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சிறந்தது.

· ஆஸ்துமா நோயாளிகள் 1 டம்ளர் வெதுவெதுப்பானவெந்நீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் வறட்டு இருமல் ஆஸ்துமா குணமாகும்.

© bujji

பருவநிலை மாற்றத்தால் தேனீக்கள்......

 பருவநிலை மாற்றத்தால் தேனீக்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் துறைத் தலைவர் பேராசிரியர் முத்துச்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் தாவரம், விலங்கு சிற்றினங்களில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், 2050க்குள் 15 முதல் 37 சதவீத உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளது.
மனிதன் இயற்கைக்கு செய்த இடையூறால், உலகம் கடும் வெப்ப மாறுபாட்டை தற்போது சந்தித்து வருகிறது. தாவரங்களில் நடக்கும் அயல் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள் தான் உறுதுணையாக உள்ளன.
தற்போதைய புவிவெப்ப மாற்றத்தால் இந்த வகை உயிரினங்கள், பல்வகை நோய் தாக்குதலால் அழிந்து வருகின்றன. பருவநிலை மாற்றங்களால் ஜெர்மனியில் 25 சதவீதமும், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் 70 சதவீதமும் தேனீக்கள் அழிந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதே போன்று, இந்தியாவிலும், கடந்த ஐந்தாண்டுகளில் 20 முதல் 35 சதவீத தேனீக்கள் அழிந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதும், ரத்தம் உறிஞ்சும் ஒட்டுண்ணி பூச்சிகள், தேனீக்களை அழிப்பதும் இதற்கு காரணமாகும்.
பருவநிலை மாறுபாட்டால் தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, தாவரங்களின் அயல் மகரந்த சேர்க்கை பாதிக்கப்படுகிறது.
இதனால், இவற்றை நம்பியிருக்கும் விவசாயிகள், தொழில் முனைவோரும் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதனால், உயிரினங்களின் பல்லுயிர் பரவல் தன்மை குறைந்து வருகின்றது.
எனவே, இது குறித்த ஆய்வு மேற்கொண்டு மாற்று ஏற்பாட்டை செய்யவேண்டியது மிக அவசியமானது என்றார்.